பவானிசாகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையம் தொடக்கம்.

ஈரோடு, ஆகஸ்ட் 29:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து மறுவாழ்வு சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையம் தொடக்க விழா நடைபெற்றது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை தொடங்கி வைத்தார். இந்த மையத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:

“பொதுவாகவே கருத்துக்கள் பரிமாற்றம் என்பது வேறு. சட்டமன்ற நிகழ்வுகள் என்பது வேறு. ஆக்கப்பூர்வமான பணிகளை நிறைவேற்றுவது தான் ஒவ்வொரு மானிய கோரிக்கையில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சட்டமன்றத்தில் இயற்றி வருகிறோம்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தைப் பொருத்தவரை விரிவுபடுத்தி தேவையைப் பூர்த்தி செய்வது முதற்கட்ட பணியாக உள்ளது. இரண்டாவது கட்டப் பணிகளாக அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற உள்ளன. கேரளா, கர்நாடகா, ஆந்திராவைப் போல விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படாததால், வறட்சி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு இல்லை. செப்டம்பர் மாதம் இறுதிக்குப் பிறகு தான் செய்யப்பட்டுள்ள பயிர்கள் என்ன என்பதை ஆய்வு செய்து, நெற்பயிராக இருந்தால் அதில் எவ்வளவு சேதாரம் ஏற்பட்டுள்ளது என்பதையும், பயிரின் மற்றும் நிலத்தின் தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும்.

அதன் பிறகு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஆய்வு செய்து, அதன் அறிக்கை பெறப்பட்ட பின்னர் வறட்சி மாவட்டமாக அறிவிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.”

மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான மறுவாழ்வு மற்றும் சேவைகள் ஒரே இடத்தில் எளிதாக கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply