பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தகராறு..! வாலிபால் மைதானத்தில் இளைஞர் வெட்டிக்கொலை.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொம்மையார்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரோவில் அருகே உள்ள பொம்மையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் அஜித் (25). நேற்று தனது பிறந்தநாளையொட்டி, அப்பகுதியில் உள்ள வாலிபால் மைதானத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த சிலருக்கும் அஜித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகராறு முற்றிய நிலையில், அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அஜித்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் பலத்த வெட்டுக்காயமடைந்த அஜித் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அஜித் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேர் கொண்ட கும்பலை அடையாளம் கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பொம்மையார்பாளையம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்