முகப்பேரில் பயங்கர தீ விபத்து! அடுத்தடுத்து வெடித்த 2 சிலிண்டர்கள்; தேவாலயத்தில் இருந்து அலறியடித்து ஓடிய மக்கள்!
சென்னை: முகப்பேர் மேற்குப் பகுதியில் கூரை வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அடுத்தடுத்து இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. இதனால் அருகிலிருந்த தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த விபத்தில் 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.60 லட்சம் ரொக்கம் தீயில் எரிந்து நாசமானது.
வீட்டில் இருந்து வெளியேறிய கரும்புகை
சென்னை அம்பத்தூர் அடுத்த முகப்பேர் மேற்குப் பகுதியில் கீதா (40) என்பவர் தனது மகன், மகளுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கீதாவின் மகள் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.
புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே வீடு முழுவதும் தீ மளமளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
அடுத்தடுத்து வெடித்த இரண்டு சிலிண்டர்கள்
தீ வீட்டின் உள்ளே பரவிய நிலையில், அங்கிருந்த இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. சிலிண்டர்கள் வெடித்த சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அச்சமடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் அருகிலேயே சிஎஸ்ஐ தேவாலயம் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலிண்டர்கள் வெடித்த சத்தம் கேட்டதால், என்ன நடக்கிறது என்று தெரியாமல் வழிபாட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு தேவாலயத்திலிருந்து வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
தீ விபத்து குறித்து தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் ஜெ.ஜெ. நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இருப்பினும், வீட்டிலிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் தீயில் எரிந்து நாசமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் என்ன?
முகப்பேர் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்