மழைநீர் வடிகால் பணிகளில் தொழில்நுட்பக் கோளாறால் தாமதம்! ஆயுத பூஜை விடுமுறைக்குள் முடிக்க அமைச்சர் விஜய் பாலாஜி உத்தரவு.

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் விஜய் பாலாஜி, ஆயுத பூஜை விடுமுறைக்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பணிகள் முடிவடையாத இடங்களில் அதிக திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் மண்டலம், 86-வது வார்டுக்கு உட்பட்ட அத்திப்பட்டு திடக்கழிவு வளாகத்தில், ரூ.2.30 கோடி மூலதன நிதியில் கட்டப்பட்ட நாய்கள் கருத்தடை மையம் மற்றும் செல்லப்பிராணிகள் மருத்துவமனையை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகனுடன் இணைந்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

அப்போது, பணிகளின் தற்போதைய நிலை குறித்து மண்டல அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், வரும் ஆயுத பூஜை விடுமுறைக்குள் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மத்திய வட்டார துணை ஆணையர் கௌஷிக் மற்றும் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொழில்நுட்பக் கோளாறால் பணிகளில் தாமதம்

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜய் பாலாஜி கூறியதாவது:

சென்னையில் பருவமழையின்போது வெள்ளப் பாதிப்புகள் அதிகமாக ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்கவும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கவும் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகச் சில இடங்களில் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பணிகள் முடிவடையாத பகுதிகளில் மழைநீர் தேங்கினால், அதை உடனடியாக வெளியேற்றுவதற்காக மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் அதிக திறன் கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தப்படும். பணியாளர்களும் இரவு, பகலாகப் பணியாற்றி வருகின்றனர்.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல், பொதுமக்களும் பாதிக்கப்படாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை விடுமுறைக்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply