சென்னையில் தவெக பிரமுகர் கண்ணன் கொலை – கல்லூரி மாணவர் வாக்குமூலத்தில் பகீர் தகவல்.
சென்னையில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த பிரமுகர் கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸ் விசாரணையில் கொலைக்கான காரணம் தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக பிரமுகர் கண்ணன் கொலை
சென்னை பெசன்ட் நகர் வண்ணான் துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் முன்னதாக அதிமுகவில் வட்டச் செயலாளராக இருந்ததாகவும், பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் வாடகை தொழில் செய்து வந்த கண்ணன், சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள எல்லை அம்மன் கோவில் தெருவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண்ணனை கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது
இந்த கொலை தொடர்பாக ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்கள் நரேஷ், மணிகண்டன், ராகேஷ், ஹரிஹரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணையில், கண்ணன் கொலைக்குப் பின்னால் நீண்டகால முன்விரோதம் இருப்பதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது.
17 ஆண்டுகால பகையே காரணமா?
போலீஸ் விசாரணையில் மாணவர் பரணி அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தின்படி, கடந்த 2009ஆம் ஆண்டு அவரது பெரியப்பா சிவா கொலை செய்யப்பட்டதாகவும், அந்த சம்பவத்தில் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக பரணி கருதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2016ஆம் ஆண்டு பரணியின் தந்தை வேலுவும் கொலை செய்யப்பட்டதாகவும், இந்த இரு கொலைகளுக்கும் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளே காரணம் என பரணி நம்பியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சமாதான பேச்சுக்கு பிறகும் நடந்த கொலை
சம்பவத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணன், பரணி உள்ளிட்ட சிலரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தனக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும், பழைய பகையை மறந்து சமாதானமாக செல்லலாம் என்றும் கண்ணன் தெரிவித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பரணி சம்மதம் தெரிவித்ததாகவும், பின்னர் மீண்டும் கண்ணன் மீது கொலை செய்யும் எண்ணம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தவெகவில் இணைந்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக வாக்குமூலம்
கண்ணன் அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து, அப்பகுதியில் செல்வாக்குடன் வலம் வந்தது தனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக பரணி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், கண்ணனை உயிருடன் விட்டால் தங்களுக்குத் தொடர்ந்து ஆபத்து ஏற்படலாம் என கருதி அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் விசாரணையில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் மேலும் தகவல்கள் வெளியாகலாம்.
தமிழக வெற்றிக்குரல்