“ஆபாச நதியும், வன்ம நதியும் ஓடுகிறது”..! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அரசியல் நாகரிகம் மற்றும் தனிநபர் விமர்சனங்கள் தொடர்பான விவாதத்தின்போது, பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான அரசியல் கருத்துகளுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், அரசியலுக்காக சாமானிய மக்களையோ, பெண்களையோ தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சமூக வலைதளங்கள் மற்றும் பொதுமேடைகளில் பெண்கள் குறித்து அவதூறாகவும், இரட்டை அர்த்தத்திலும் பேசப்படுவதை மக்கள் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் விஜய் எச்சரித்தார். மற்ற பெண்களையும் தங்களது வீட்டில் உள்ள தாய், சகோதரி உள்ளிட்ட உறவுகளைப் போல மதித்து பேச வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் சில கடந்தகால அரசியல் பேச்சுகளை சுட்டிக்காட்டிய முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் “எலும்பை உடைப்பேன்” போன்ற வன்முறையை பிரதிபலிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவது அரசியல் நாகரிகத்திற்கு ஏற்றதல்ல என விமர்சித்தார். அரசியல் ரீதியான விமர்சனங்களை தமது அரசு வரவேற்பதாகவும், ஆனால் தனிநபர் மீதான இழிவான மற்றும் வன்முறை சார்ந்த பேச்சுகளை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் எதிர்கொண்ட அவமானகரமான சம்பவங்களை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய், எதிர்காலத்தில் எந்தவொரு பெண்ணுக்கும் இதுபோன்ற சூழல் ஏற்படாத வகையில் அரசு தெளிவான நிலைப்பாட்டுடன் செயல்படும் என தெரிவித்தார்.

“ஆபாச நதியும், வன்ம நதியும் ஓடுகிறது” என்ற முதல்வர் விஜயின் கருத்து, சட்டப்பேரவை விவாதத்தில் கவனம் பெற்றதுடன், அரசியலில் தனிநபர் விமர்சனங்களுக்கு பதிலாக நாகரிகமான விவாதம் தேவை என்ற அவரது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியது.

Leave a Reply