“பெரியாரின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்!” – முதலமைச்சர் விஜய்.

சென்னை – செப்டம்பர் 17: தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாளையொட்டி, அவரது சிந்தனைகளையும் கொள்கைகளையும் நினைவுகூர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு உள்ளிட்ட முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி மற்றும் மத வேறுபாடுகளைக் களைவதற்கும், மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் போராடியதாக குறிப்பிட்டுள்ளார். அவரது பிறந்தநாளில் புரட்சிகரமான சிந்தனைகளையும் கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகள் மூலம் அனைவரும் வளம்பெறும் வகையிலும், சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கும் வகையிலும் உறுதியேற்க வேண்டும் என தனது பதிவில் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்க வேண்டும் என்றும், வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply