கோவையில் ரூ.400 கோடியில் பின்டெக் ஹப்! காஞ்சிபுரத்தில் ரூ.175 கோடியில் செமிகண்டக்டர் பூங்கா – முதல்வர் விஜய் அறிவிப்பு.

சென்னை: தமிழ்நாட்டின் தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், கோயம்புத்தூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 31) 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர், தமிழ்நாட்டில் புதிய தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்களை அறிவித்தார்.

காஞ்சிபுரத்தில் செமிகண்டக்டர் பூங்கா

செமிகண்டக்டர் துறையில் அதிகளவில் முதலீடுகளை ஈர்த்து, இத்துறையில் தமிழ்நாட்டின் பங்களிப்பை உயர்த்தும் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மேனுபேக்சரிங் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.175 கோடி மதிப்பீட்டில் SIPCOT நிறுவனம் மூலம் இந்தப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு தேவையான உலகத் தரத்திலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) வசதிகளும் இந்தப் பூங்காவில் ஏற்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் செமிகண்டக்டர் துறையில் சுமார் ரூ.2,000 கோடி வரை முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், சுமார் 5,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் ரூ.400 கோடியில் பின்டெக் ஹப்

நிதி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் நிதிச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், கோயம்புத்தூரில் ‘கோயம்புத்தூர் பின்டெக் ஹப்’ என்ற டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்த மையம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு, அலுவலக வசதிகள், புத்தொழில் நிறுவனங்களுக்கான இடங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.

இதன் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிதி மற்றும் நிதி தொழில்நுட்பத் துறையில் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவித்து உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மண்டலத்தில் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் ஹப்

இதனிடையே, தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன.

இதனை கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பன்முனை சரக்கு போக்குவரத்து மையம் (Multi Modal Logistics Hub) அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்கான ஆய்வுப் பணிகளை TIDCO மேற்கொள்ள உள்ளது.

செமிகண்டக்டர் உற்பத்தி, நிதி தொழில்நுட்பம் மற்றும் சரக்கு போக்குவரத்து போன்ற துறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய முயற்சிகளாக பார்க்கப்படுகின்றன.

Leave a Reply