கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டம்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆய்வு!
3 கி.மீ. பகுதியில் நடைபாதை, மிதிவண்டிப் பாதை, பசுமைப் பகுதிகள் உள்ளிட்ட வசதிகள் – முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
சென்னை – செப்டம்பர் 22: கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (22.09.2026) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
2026–2027ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், கூவம் ஆற்றின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூவம் ஆற்றின் இயற்கையான நிலையை மீட்டெடுப்பதுடன், நிலையான சுற்றுச்சூழல் சீரமைப்பை உருவாக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்தும், ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தரநிலைகளை உறுதி செய்யும் வகையில், திட்டத்திற்கான உயர்தர அணுகுமுறைகளை உருவாக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
3 கி.மீ. பகுதியில் பல்வேறு வசதிகள்
கூவம் ஆற்றின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான கருத்துருவாக்கம் (Concept Plan) மற்றும் செயல் விளக்கத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கி.மீ. நீளமுள்ள பகுதிகளில் நடைபாதை மற்றும் மிதிவண்டிப் பாதைகள், நதிக்கரை நடைபாதைகள், பார்வையிடும் தளங்கள், பசுமைப் பகுதிகள், சமூக பயன்பாட்டு வசதிகள் மற்றும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் கூவம் ஆற்றின் சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்துவதுடன், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறந்த பொதுவெளிகள் மற்றும் தேவையான வசதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நிலையான அணுகுமுறையுடன் மறுசீரமைப்பு
சென்னை மாநகரின் நதிச்சூழலை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த பொதுவெளிகளையும் வசதிகளையும் உருவாக்கும் நோக்கில், கூவம் ஆறு மறுசீரமைப்பை பல்வேறு கட்டங்களாக ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறையுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூவம் ஆற்றின் மறுசீரமைப்புப் பணிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுமக்கள் பயன்பாடு மற்றும் நீண்டகால நிலைத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. கனகதீப் சிங் பேடி, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. மு.அ. சித்திக், இ.ஆ.ப., நீர்வளத்துறை செயலாளர் திரு. பிரசாந்த் மு. வடநேரே, இ.ஆ.ப., சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் உறுப்பினர் செயலர் திரு. சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூவம் ஆற்றை மறுசீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு மற்றும் அடுத்தகட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கான திட்டமிடலில் இந்த ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்