ஸ்ரீமுஷ்ணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு!
கடலூர்: கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
இன்று காலை 9 மணியளவில் தொடங்கிய இந்த ஆய்வின்போது, சோழத்தரம், ஸ்ரீ நெடுஞ்சேரி, அம்புஜவல்லிப்பேட்டை, இனமங்கலம், தேத்தாம்பட்டு, ஆதிவராகநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வளர்ச்சிப் பணிகளின் நிலையைப் பார்வையிட்டார்.
பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
ஸ்ரீ நெடுஞ்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வகுப்பறைக் கட்டடத்தையும், அம்புஜவல்லிப்பேட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர்த் தேக்கத் தொட்டியையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இனமங்கலம் கிராமத்தில் கிராமப்புறச் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் மீன் குஞ்சு வளர்ப்புக் குளம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தேத்தாம்பட்டு கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தையும் ஆய்வு செய்தார்.
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர்
தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நிகழ்விலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகப் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஸ்ரீமுஷ்ணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்ததுடன், பொதுமக்களின் குறைகளையும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக்குரல்