டெல்லியில் திடீரென இடிந்த 5 மாடி கட்டிடம்..! 6 பேர் பலி – அதிர்ச்சி சிசிடிவி காட்சி
புதுடெல்லி:
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகே உள்ள சத்யா நிகேதன் பகுதியில், மாணவர்களுக்கான கட்டண விருந்தினர் விடுதியாக (PG) பயன்படுத்தப்பட்டு வந்த 5 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 1 மணியளவில், சுமார் 50 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடம் சில நொடிகளில் முழுமையாக இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் தரைத்தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த புனரமைப்புப் பணிகள் கட்டிட இடிபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி
கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தின் 21 விநாடிகள் கொண்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில், அடித்தளம் உள்ளிட்ட 5 மாடிக் கட்டிடம் கண் இமைக்கும் நேரத்தில் அப்படியே சரிந்து விழுவது பதிவாகியுள்ளது. கட்டிடத்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
#WATCH | Delhi: CCTV footage from the building collapse site in Satya Niketan of Delhi's South-West district. Six people have lost their lives.
— ANI (@ANI) September 7, 2026
(Source: Local Resident) pic.twitter.com/7MtDbb3pJF
இரவு முழுவதும் தொடர்ந்த மீட்புப் பணி
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 2 குழுக்கள் மற்றும் 70 வீரர்கள் ஈடுபட்டனர். மோப்ப நாய் குழுவும் பயன்படுத்தப்பட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களுக்கு சுவாசிக்க உதவும் வகையில் ஆக்சிஜன் சிலிண்டர்களும் கீழே இறக்கப்பட்டதாக NDRF அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புத் துறை, டெல்லி காவல்துறை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
30 முதல் 50 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளுக்குள் 30 முதல் 50 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அப்போது அஞ்சப்பட்டதால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
இதனிடையே, கட்டிடத்தின் உரிமையாளர் ஹரிராம் உள்ளிட்டோர் மீது கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்துதல், கட்டிடப் பராமரிப்பில் அலட்சியம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
டெல்லி முதல்வர் ரேகா குப்தா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, மீட்பு மற்றும் சிகிச்சைப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தவும், நீதித்துறை விசாரணைக்கும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் சென்று முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்டிடத்தின் பாதுகாப்பு, புனரமைப்புப் பணிகள் மற்றும் விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்