தருமபுரியில் வடமாநில வியாபாரியின் வாகனம் திருட்டு! சிசிடிவி மூலம் சிக்கிய இரு இளைஞர்கள்.
தருமபுரி:
பாலக்கோடு அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த வியாபாரியின் இருசக்கர வாகனத்தைத் திருடியதாக இரு இளைஞர்களை மாரண்டஅள்ளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சாகீர் அலாம் (24), இருசக்கர வாகனத்தில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் சென்று கிராமப்புறங்களில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கொரவாண்டஅள்ளி மாரியம்மன் கோவில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனம் இரவோடு இரவாகத் திருடப்பட்டது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, வாகனத்தைத் திருடியதாகக் கொரவாண்டஅள்ளியைச் சேர்ந்த பூவரசன் (19), மூங்கில்பட்டியைச் சேர்ந்த பச்சியப்பன் (23) ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக வெற்றிக்குரல்