தருமபுரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்! 820 பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு – ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டிகள் தொடங்கி வைப்பு.

தருமபுரி – அக்டோபர் 7: தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கின. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 820 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயகாந்தம் தலைமை வகித்து, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இடைநிலைக் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் பெருமாள், தொடக்கக் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் தென்றல், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சிவரஞ்சன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும், 14 முதல் 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 415 மாணவர்களும், 405 மாணவிகளும் என மொத்தம் 820 பேர் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், விரைவு ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. மாணவ, மாணவிகள் தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தி ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் வீரன் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும், மாவட்ட அளவில் திறமையான வீரர், வீராங்கனைகளை அடையாளம் காண்பதற்கும் இதுபோன்ற போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன.

Leave a Reply