தருமபுரியில் பயங்கர விபத்து: ரயில்வே மேம்பாலத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்.
தருமபுரி, செப்.07:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொ.மல்லாபுரம் ரயில்வே மேம்பாலத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
கடத்தூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் வசந்தகுமார் (45), தனது நண்பர் மணிகண்டனுடன் பொம்மிடியில் இறைச்சி வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கடத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பொ.மல்லாபுரம் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது, எதிரே மாதகோயில் தெருவைச் சேர்ந்த இருவர் கே.டி.எம். இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களும் மேம்பாலத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
மோதலின் வேகத்தில் தூக்கி வீசப்பட்ட வசந்தகுமார், மேம்பாலத்தின் மேலிருந்து கீழே தலைகீழாக விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் வசந்தகுமாருடன் சென்ற மணிகண்டனுக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டது. கே.டி.எம். இருசக்கர வாகனத்தில் வந்த மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொம்மிடி போலீசார், வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக பொ.மல்லாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக்குரல்