மாற்றுத்திறனாளிகளுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்! மின்சார வாகனம் முதல் உதவித்தொகை உயர்வு வரை – அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிரடி
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய நலத்திட்ட அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டுள்ளார். மின்சார வாகன உதவி, புதிய இல்லங்கள், பயிற்சி மையங்கள், இலவச பேருந்து பயணத் திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு மின்சார வாகன உதவி
மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து மற்றும் வாழ்வாதார தேவைகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு புதிய மின்சார வாகன உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு 10 இல்லங்கள்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக அரசு நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.1.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு புதிய இல்லங்கள்
முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக அரசு நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் 2 இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 6 பயிற்சி மையங்கள்
அறிவுசார் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 3 பயிற்சி மையங்கள், செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்காக 2 பயிற்சி மையங்கள், பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 1 பயிற்சி மையம் என மொத்தம் 6 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
இதற்காக ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடலூரில் 2 புதிய இல்லங்கள்
கடலூரில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் 2 இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 100 பேர் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் இலவச பயணத் திட்டம் விரிவாக்கம்
தனித்து செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள், UDID அட்டையைப் பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் மாநகர அல்லது நகரப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் இலவசப் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல்
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் மெய்நிகர் கற்றல் முறையில் கல்வி கற்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு
பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாடங்களைப் படிக்க உதவும் வாசிப்பாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 2026-27ஆம் கல்வியாண்டு முதல் உயர்த்தப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளார்.
தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000, இளங்கலை மாணவர்களுக்கு ரூ.5,000, தொழில்கல்வி மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ரூ.6,000 என வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மேலும் உயர்த்தப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் கல்வி, போக்குவரத்து, மறுவாழ்வு, தொழிற்பயிற்சி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ள இந்த 9 அறிவிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன.
தமிழக வெற்றிக்குரல்