இறந்த வாலிபர் நேரில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக உத்தரவு! ஈரோடு டிஆர்ஓ கடிதத்தால் பெற்றோர் அதிர்ச்சி.
நாமக்கல்: சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபர், மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு நேரில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டு, அவருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இறந்து போன மகனுக்கு அபராதம் விதித்து வந்த கடிதத்தைப் பார்த்து, குமாரபாளையத்தைச் சேர்ந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபர்!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கலைமகள் வீதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி செல்வாம்பாள். இவர்களது மகன் அரவிந்தன் (29), ஈரோட்டில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 2025 அக்டோபர் 1ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோட்டில் நடந்த சாலை விபத்தில் அரவிந்தன் உயிரிழந்தார். பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பின்னர், அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான இறப்புச் சான்றிதழை மருத்துவமனை கடந்த அக்டோபர் 23ஆம் தேதி வழங்கியது.
வீட்டு உபயோக எரிவாயு உருளை பயன்படுத்தியதாக வழக்கு!
மகனை இழந்த துயரத்தில் இருந்த பெற்றோருக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமாரிடமிருந்து தபால் மூலம் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தைப் படித்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஈரோடு மாவட்டக் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர், பவானி ஊராட்சிக்கோட்டையில் அரவிந்தன் நடத்தி வந்த துரித உணவுக் கடையில் திடீர் சோதனை நடத்தியதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, வீட்டு உபயோகத்திற்கான மானிய எரிவாயு உருளையை வணிக நோக்கில் பயன்படுத்தி உணவு தயாரித்ததாகக் கூறி, உருளையைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கடிதத்தில் தகவல்!
இந்த வழக்கு தொடர்பாக, அரவிந்தன் கடந்த 2026 ஜூன் 15ஆம் தேதி ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு நேரில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு உபயோக எரிவாயு உருளையை வணிகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தக் கூடாது என்பது தனக்குத் தெரியாது என்றும், தன்னை மன்னித்து வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அரவிந்தன் கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டு, அவருக்கு ரூ.2,000 அபராதம் விதித்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அபராதத் தொகையை அரசின் குடிமைப்பொருள் துறை கணக்கில் செலுத்தி, அதற்கான செலுத்துச் சீட்டைச் சமர்ப்பித்து, ஈரோடு யமுனா இண்டேன் எரிவாயு நிறுவனத்தில் காட்டி உருளையைப் பெற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவருக்கு அபராதம் விதித்த உத்தரவால் சர்ச்சை!
அரவிந்தன் 2025 அக்டோபர் மாதமே சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர் 2026 ஜூன் மாதம் நேரில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த வாலிபருக்கு அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம், நிர்வாக நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்