கூடலூர் ஓவேலியில் 2 பேரின் உயிரிழப்புக்கு காரணமான புலி பிடிபட்டது!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் இரண்டு பேரின் உயிரிழப்புக்கு காரணமானதாகக் கருதப்பட்ட புலி, நீண்ட நாட்களாக நடைபெற்ற தீவிர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு இன்று வனத்துறையினரால் பிடிக்கப்பட்டதாக வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஓவேலி பகுதியில் அடுத்தடுத்து இரண்டு பேர் புலி தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து புலியைப் பிடிக்க வனத்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடும் மழை, அடர்ந்த வனப்பகுதி மற்றும் கடினமான நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தேடுதல் பணி நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட வனத்துறைப் பணியாளர்கள், சிறப்புக் குழுக்கள், கேமரா டிராப்புகள், தெர்மல் சென்சார் ட்ரோன்கள், கூண்டுப் பொறிகள் மற்றும் கும்கி யானைகள் உள்ளிட்ட பல்வேறு வளங்கள் பயன்படுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி சட்டப்பேரவையில் புலியைப் பிடிப்பதாக உறுதியளித்ததாகவும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி ஓவேலி களப்பகுதிக்கு நேரில் சென்று நடவடிக்கைகளை ஆய்வு செய்ததாகவும், களப்பணியில் ஈடுபட்டிருந்த குழுவினருடன் ஆலோசனை நடத்தி தேவையான வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையில் ஒருங்கிணைந்து செயல்பட்ட வனத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், வனத்துறைப் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு அமைச்சர் ரஞ்சித்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

ஓவேலி பகுதியில் இரண்டு உயிரிழப்புகளுக்குப் பின்னர் பல நாட்களாக நீடித்து வந்த புலியைப் பிடிக்கும் நடவடிக்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக இந்த தகவல் தெரிவிக்கிறது.

Leave a Reply