6 பேருடன் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மாயம்: நான்டக்கெட் கடற்பகுதியில் தீவிர தேடுதல்.
பெர்முடாவில் இருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நோக்கி 6 பேருடன் புறப்பட்ட Gulfstream G100 ரக ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள நான்டக்கெட் தீவு கடற்பகுதியில் அமெரிக்க கடலோரக் காவல்படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
விமானத்துடனான தொடர்பு துண்டிப்பு
வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.41 மணியளவில், பெர்முடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாஸ்டன் நோக்கி விமானம் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் விமானத்துடனான தொடர்பு அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகமான FAA-வுக்கு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விமானத்தின் இருப்பிடத்தை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடல் மற்றும் வான்வழி தேடுதல்
மாயமான விமானத்தை தேடும் பணியில் வான்வழி மற்றும் கடல்வழி தேடுதல் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
நான்டக்கெட் தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியை மையமாகக் கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விமானத்தில் இருந்த 6 பேரின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. விமானம் மாயமானதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக்குரல்