ஓசூர் கிரிக்கெட் லீக்கில் டிவிஎஸ் அணி சாம்பியன்..! வீரர் நடராஜன் பங்கேற்பு.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காவேரி மருத்துவமனை மற்றும் ஓசூர் தொழில் கூட்டமைப்பு சங்கம் இணைந்து நடத்தும் 7-வது ஆண்டு ஓசூர் கிரிக்கெட் லீக் போட்டிகள் அதியமான் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.
ஓசூர் மற்றும் சுற்றுவட்டார தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான இந்தப் போட்டியில் டிவிஎஸ், அசோக் லேலண்ட், டெனக்கோ உள்ளிட்ட 48 தொழில் நிறுவன அணிகள் பங்கேற்றன. மூன்று வார இறுதி நாட்களில் ஆறு நாட்கள் நடைபெற்ற போட்டியின் இறுதிச்சுற்றில் டிவிஎஸ் மற்றும் டெனக்கோ அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த டிவிஎஸ் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெனக்கோ அணி, 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் டிவிஎஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதில் டெனக்கோ அணி இரண்டாவது இடத்தையும், ஃபர்ஸ்ட் ஸ்டெப் பேபிகேர் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுடன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் ஈடுபட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தொழில் நிறுவனங்களுக்கிடையே குழு உணர்வு, விளையாட்டு ஆர்வம் மற்றும் ஊழியர்களின் உடல் நலத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஓசூர் கிரிக்கெட் லீக், இந்த ஆண்டும் சிறப்பான வரவேற்பை பெற்றது.
தமிழக வெற்றிக்குரல்