ஓசூரில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள ஹாஷிஷ் ஆயில் பறிமுதல்: கல்லூரி மாணவர் கைது!

ஓசூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள ஹாஷிஷ் ஆயில் எனப்படும் போதைப்பொருளைக் கடத்தி வந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி காவல் சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாகச் சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவரிடம் அரை லிட்டர் திரவம் அடங்கிய பாட்டில் இருந்ததைப் போலீசார் கவனித்தனர். அது குறித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரைப் பேருந்திலிருந்து இறக்கி, சோதனைச் சாவடிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்

விசாரணையில், பிடிபட்டவர் சென்னை பகுதியைச் சேர்ந்த அனிருத் (21) என்பதும், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் மூன்றாம் ஆண்டு பயின்று வருவதும் தெரியவந்தது.

அவர் வைத்திருந்தது, கஞ்சா செடியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் போதைப்பொருளான ஹாஷிஷ் ஆயில் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாகப் போலீசார் தெரிவித்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அரை லிட்டர் ஹாஷிஷ் ஆயிலின் சந்தை மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் விற்பனை செய்யத் திட்டமா?

சென்னை பெருங்களத்தூர் பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் விற்பனை செய்வதற்காக ஹாஷிஷ் ஆயிலைக் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அனிருத்தைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான ஹாஷிஷ் ஆயிலைப் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தல் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply