400 தம்பதிகள் பங்கேற்பு..! ஓசூரில் நடைபெற்ற மனைவி நல வேட்பு விழா
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மீரா மகால் திருமண மண்டபத்தில், உலக சமுதாய சேவா சங்கம், ஓசூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மற்றும் தவமையங்கள் சார்பில், வேதாத்திரி மகரிஷியின் துணைவியார் லோகாம்பாளின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது.
விழாவில் சுமார் 400 தம்பதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக வேதாத்திரிய கும்மி நடனம் நடைபெற்றது. தொடர்ந்து உலக சமுதாய சேவா சங்கக் கொடி ஏற்றப்பட்டது.
உலக சமுதாய சேவா சங்கத்தின் மூத்த பேராசிரியர் ஆழியாறு அருள்நிதி பெருமாள், அவரது துணைவியார் சந்திரா ஆகியோர் தம்பதியராக இணைந்து விழாவை தொடங்கி வைத்தனர்.
விழாவில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் அருட்காப்பு கூறிக்கொண்டனர். தொடர்ந்து மலர்கள் மற்றும் கனிந்த பழங்களை கைகளில் ஏந்தி, கண்கள் மூலம் காந்தப் பரிமாற்றம் செய்து கொண்டு, மலர் மற்றும் பழங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
மேலும், தம்பதிகள் ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றியபடி அமர்ந்து, திருமணம் நடைபெற்ற நாள் முதல் இதுவரை தங்களது வாழ்க்கையில் நடைபெற்ற இனிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓசூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
தம்பதியர்களிடையே அன்பு, புரிதல் மற்றும் குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த விழா, பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.
தமிழக வெற்றிக்குரல்