அரசு பள்ளிக்கு ரூ.18 லட்சத்தில் கழிவறைகள்..! CSR நிதியில் பணிகள் தொடக்கம்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 50 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் போதிய கழிவறை வசதி இல்லாத நிலையில், புதிய கழிவறைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளி தலைமையாசிரியை ஈஸ்வரி பாய், கழிவறை வசதி ஏற்படுத்துவது தொடர்பாக டைட்டன் இன்ஜினியரிங் ஆட்டோமேஷன் (டீல்) நிறுவனத்தை தொடர்பு கொண்டார். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் உரிய அனுமதி பெறப்பட்டு, டீல் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) நிதியில் இருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கக்கல்வி) நரசிம்மன் மற்றும் டீல் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத் தலைவர் பாஸ்கர் ஆகியோர் பூமி பூஜை செய்து, கழிவறை கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ராஜூ, வட்டார வள மைய ஆசிரியை சுபா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபிரபா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், டீல் நிறுவன மேலாளர்கள் ஹரிஹரன், செந்தில்குமார், தணிகைவேல், ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பணிகளுக்கான ஏற்பாடுகளை டீல் நிறுவன பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு மற்றும் கட்டடப் பொறியாளர் மூர்த்தி மேற்கொண்டனர்.
பள்ளி மாணவர்களின் அடிப்படை சுகாதார வசதியை மேம்படுத்தும் வகையில், CSR நிதியில் கழிவறைகள் அமைக்கப்படுவது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்