மொபைல் போன்களுக்கு பதிலாக காகித பார்சல்..! ரூ.1.12 லட்சம் மோசடி – ஒருவர் கைது.
ஓசூர்:
பழைய மொபைல் போன்களை விற்பனைக்கு தருவதாகக் கூறி ரூ.1.12 லட்சம் மோசடி செய்ததாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மொபைல் கடை உரிமையாளரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே அத்திமுகத்தைச் சேர்ந்த சசிக்குமார் (28), ஓசூரில் உள்ள தனியார் மொபைல் ஷோரூம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஓலைப்பட்டியைச் சேர்ந்த அறிவழகன் (34) என்பவருக்கும், ஏற்கனவே ஒரே தனியார் ஷோரூமில் பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது தாரமங்கலத்தில் மொபைல் கடை நடத்தி வரும் அறிவழகன், தன்னிடம் பழைய மொபைல் போன்கள் இருப்பதாக சசிக்குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பிய சசிக்குமார், அவற்றை வாங்கி விற்பனை செய்யும் நோக்கில் சில நாட்களுக்கு முன்பு QR கோடு மூலம் ரூ.1.12 லட்சத்தை அனுப்பியுள்ளார்.
ஆனால் பணத்தை பெற்ற பிறகு, மொபைல் போன்களுக்கு பதிலாக காகிதங்கள் மட்டுமே இருந்த பார்சல் சசிக்குமாருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அறிவழகனிடம் பணம் மற்றும் மொபைல் போன்கள் குறித்து கேட்டுள்ளார்.
அப்போது அறிவழகன் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாக சசிக்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஓசூர் டவுன் போலீசார் அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்