ஓசூரில் மென்பொறியாளர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மென்பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீட்டை பூட்டிவிட்டு சென்ற தம்பதி

பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ராகேந்த் (45), தனது மனைவி நிமாவுடன் ஓசூர் அருகே பேகேப்பள்ளி ஊராட்சி சரஸ்வதி நகர் லேஅவுட் பகுதியில் வசித்து வருகிறார்.

நிமா கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

திங்கள்கிழமை காலை நிமா வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிலையில், ராகேந்த் வீட்டில் இருந்த தனது பெற்றோரை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு சென்றுள்ளார்.

வீட்டின் சாவி மறந்ததால் உறவினர் வீட்டில் தங்கிய மனைவி

ராகேந்த் மற்றும் நிமா ஆகிய இருவரிடமும் வீட்டின் தனித்தனி சாவிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிமா, தன்னிடம் இருந்த சாவியை தேடியபோது, அதை மறதியாக வீட்டிற்குள்ளேயே வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கணவர் ராகேந்திடம் அவர் தகவல் தெரிவித்துள்ளார். மறுநாள் கேரளாவில் இருந்து ஓசூர் திரும்ப உள்ளதாக கூறிய ராகேந்த், திங்கள்கிழமை இரவு உறவினர் வீட்டில் தங்கிக்கொள்ளுமாறு நிமாவிடம் தெரிவித்துள்ளார்.

பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் மாயம்

இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை ஓசூர் திரும்பிய ராகேந்த், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த கம்மல், மோதிரம், சங்கிலி, வளையல் உள்ளிட்ட சுமார் 40 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ராகேந்த் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? அவர்கள் எவ்வாறு வீட்டுக்குள் நுழைந்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply