இதய சிகிச்சையில் புதிய மைல்கல்..! ‘India Valve Registry’ தொடக்கம் – அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்பு.

சென்னையில் நடைபெற்ற ‘India Valves 2026’ தேசிய மருத்துவ மாநாட்டில், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ‘India Valve Registry’ எனப்படும் இந்திய இதய வால்வு பதிவேட்டை தொடங்கி வைத்தார்.

இதய வால்வு மற்றும் இதய அமைப்பு சார்ந்த நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி இதயவியல் மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஜி. அருண்ராஜ் உள்ளிட்ட முக்கிய மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

“இந்தியாவுக்கான மருத்துவத் தரவுகள் அவசியம்”

இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்படும் இதய வால்வு சிகிச்சைகள் தொடர்பான உண்மையான மருத்துவத் தரவுகளை முறையாகவும் பாதுகாப்பாகவும் சேகரிப்பதே ‘India Valve Registry’-யின் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் இதய வால்வு சிகிச்சைகளின் முடிவுகள் குறித்த இந்தியாவுக்கே உரிய மருத்துவ ஆதாரங்களை உருவாக்கவும், சிகிச்சை முறைகளை மேலும் மேம்படுத்தவும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பேசியதாக தனது சமூக வலைதளப் பதிவில் அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியாவில் இதய வால்வு சிகிச்சைகளுக்கான தரவுகள் நீண்ட காலமாக பிற நாடுகளின் தரவுகளைச் சார்ந்திருந்த நிலையில், இந்திய மக்களின் சூழலுக்கேற்ற தேசிய அளவிலான பதிவேடு அவசியம் என வலியுறுத்தியதாகும்.

மேலும், தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால், ஏழை மற்றும் எளிய மக்களுக்கும் அதிநவீன இதய சிகிச்சைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் சுட்டிக்காட்டியதாக அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய நோயாளிகளுக்கான சிகிச்சையை தரவுகள் அடிப்படையில் மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள India Valve Registry, இந்திய மருத்துவத் துறையில் முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply