இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் போட்டி டிக்கெட் பெயரில் ஆன்லைன் மோசடி: சைபர் போலீஸ் எச்சரிக்கை.

இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாகக் கூறி, சமூக வலைதளங்கள் மூலம் லட்சக்கணக்கில் ஆன்லைன் பண மோசடி செய்யும் கும்பல்கள் செயல்பட்டு வருவதாக சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான பக்கங்கள் மற்றும் பதிவுகளை உருவாக்கி, போட்டி நடைபெறும் தேதி, இடம், டிக்கெட் விலை உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு டிக்கெட்டுகள் கிடைப்பதாக மோசடி விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

இந்த விளம்பரங்களில் கொடுக்கப்படும் இணைப்பை கிளிக் செய்யும் நபர்களை வாட்ஸ்அப்பிற்கு அழைத்துச் சென்று, பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்காக போலியான முன்பதிவு படிவங்கள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய தொகையில் தொடங்கும் மோசடி

முதலில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான முன்பணம் எனக் கூறி சிறிய தொகையை வசூலிக்கும் மோசடி கும்பல், அதன் பின்னர் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாகக் கூறி போலியான ‘ஆர்டர் கன்பர்மேஷன்’ தகவலை அனுப்புகின்றனர்.

தொடர்ந்து ஜிஎஸ்டி, ரீஃபண்டபிள் கட்டணம், வெரிபிகேஷன் கட்டணம், செயலாக்கக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி கூடுதல் பணம் கேட்கப்படுவதாக சைபர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொகை பின்னர் திருப்பி வழங்கப்படும் எனக் கூறி நம்ப வைக்கும் மோசடி நபர்கள், அதன்பிறகும் ‘டிரான்சாக்ஷன் பிராசஸிங்’, ‘ரீஃபண்ட் பெண்டிங்’ உள்ளிட்ட காரணங்களைக் கூறி மீண்டும் மீண்டும் பணம் கேட்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பணம் செலுத்த மறுத்தால் டிக்கெட்டும், ஏற்கனவே செலுத்திய பணமும் இழக்கப்படும் என மிரட்டி மேலும் பணத்தைப் பெறும் முயற்சிகளும் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை

  • சமூக வலைதளங்களில் வெளியாகும் கிரிக்கெட் அல்லது விளையாட்டுப் போட்டி டிக்கெட் விளம்பரங்களை உடனடியாக நம்ப வேண்டாம்.
  • டிக்கெட் கிடைக்கும் தகவல் மற்றும் முன்பதிவு விவரங்களை அதிகாரப்பூர்வ தளங்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களின் அறிவிப்புகள் மூலம் மட்டுமே உறுதி செய்ய வேண்டும்.
  • சமூக வலைதள விளம்பரங்களில் குறிப்பிடப்படும் வாட்ஸ்அப் எண்களுக்கு நேரடியாக பணம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
  • ஜிஎஸ்டி, ரீஃபண்டபிள் கட்டணம், செயலாக்கக் கட்டணம், வெரிபிகேஷன் கட்டணம் போன்ற பெயர்களில் கூடுதல் பணம் கேட்கப்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • ஆரம்பத்தில் சிறிய தொகையைப் பெற்றுக்கொண்டு, தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக பணம் கேட்பது மோசடியின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.
  • புக்கிங் ஐடி அல்லது ஆர்டர் கன்பர்மேஷன் கிடைத்துள்ளதால் மட்டுமே டிக்கெட் உண்மையானது என கருதக்கூடாது.
  • ஓடிபி, யுபிஐ பின், வங்கி கணக்கு அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது.

மோசடியில் சிக்கினால் உடனடியாக புகார்

இதுபோன்ற போலியான டிக்கெட் விளம்பரங்கள் கண்ணில் பட்டாலோ அல்லது ஆன்லைன் பண மோசடியில் சிக்கியிருந்தாலோ, தாமதிக்காமல் 1930 என்ற சைபர் குற்றப்புகார் உதவி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும்.

மேலும், cybercrime.gov.in – தேசிய சைபர் குற்றப்புகார் தளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.

Leave a Reply