கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 2 பேர் கைது – வயநாட்டில் போலீசார் பிடித்தனர்.
கேரளா: கலமசேரி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்மு என அழைக்கப்படும் சரண்யா மற்றும் சஞ்சு ஆகிய இருவரும் வயநாட்டில் போலீசாரால் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்ரீராஜ் மற்றும் ஜித்து மார்டின் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து சரண்யா மற்றும் சஞ்சு தலைமறைவாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஸ்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை லாட்ஜுக்கு அழைத்துச் சென்று முதலில் நேர்காணல் நடத்தியதாகவும், பின்னர் மீண்டும் அழைத்து சென்று போதைப்பொருள் கலந்த ஐஸ்கிரீமை வழங்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதற்காக சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சரண்யா ஸ்பாவில் பணியாற்றி வந்தவர் என்றும், அவரும் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். ஸ்பா தொழிலை பயன்படுத்தி சட்டவிரோத பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு நான்கு ஸ்பா மையங்கள் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் மேலும் குற்றவாளிகள் இருக்கலாம் என்றும், அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். தனது மனைவி கடுமையான வன்முறையை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்