தவெக தேர்தல் வாக்குறுதியின் அடுத்த கட்டம்: “காமராஜர் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கம்!

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு – நாளை சென்னையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.

சென்னை – செப்டம்பர் 21: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நாளை (செப்டம்பர் 22) சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார் என தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாக 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த விரிவாக்கத்தின் மூலம் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாகப் பயன்பெற உள்ளனர்.

இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.724 கோடி எனவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்த விரிவாக்கம் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் உள்ள திருவான்மியூர் காந்தி கிராம அரசு நடுநிலைப்பள்ளியில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டத்தை செயல்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாகவும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 2,150 பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாகவும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

ஊரகப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே காலை உணவைத் தயாரித்து வழங்க உள்ளனர்.

மாணவர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்தை கருத்தில் கொண்டு, காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சூடான, சுவையான, உரிய அளவிலான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதுடன், பசியின்றி பள்ளிக்கு வருவதற்கும், கல்வியில் முழுமையாக கவனம் செலுத்துவதற்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ந. ஆனந்த், பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.

இதன் மூலம் தொடக்கப்பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.

Leave a Reply