பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்தியபோது விபரீதம்: கீழே விழுந்த 48 வயது நபர் உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே சிறிய பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்தியபோது நிலைதடுமாறி கீழே விழுந்த 48 வயது நபர் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் ஆறுமுகம் (48). இவர் நேற்று இரவு மதுபானம் வாங்கிக்கொண்டு, கிருஷ்ணகிரி–திருப்பத்தூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கந்திலி அடுத்த சின்ன கந்திலி பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு சிறிய பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மதுபோதையில் இருந்த ஆறுமுகம் திடீரென நிலைதடுமாறி பாலத்தின் மீது இருந்து தலைகுப்புற கீழே விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பாலத்தின் கீழே ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கந்திலி போலீசார், ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகம் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்