சொகுசு காரில் சுற்றி நோட்டமிட்டு கொள்ளை! 5 வீடுகளைக் குறிவைத்தபோது சிக்கிய 4 பேர் – கல்லூரி மாணவிகள் உட்பட கைது.
தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகள் மற்றும் கோயில்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக, இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அடுத்ததாக ஐந்து வீடுகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தங்க நகைகள், ரொக்கப் பணம், பித்தளைப் பாத்திரங்கள், குத்துவிளக்குகள், சமையல் எரிவாயு உருளை, தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர் கொள்ளை புகார்: தனிப்படை அமைத்து விசாரணை
காரிமங்கலம், அனுமந்தபுரம், பிக்கனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
இதையடுத்து, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் உத்தரவிட்டார். அதன்பேரில், டி.எஸ்.பி. மாலதி, காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர் பெருமாள் மற்றும் பச்சமுத்து ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பழைய சொகுசு காரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான காரை மடக்கிப் பிடித்த போலீசார்
இந்நிலையில், காரிமங்கலம் பகுதியில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர். அந்தக் காரில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இருந்தனர். மேலும், சமையல் எரிவாயு உருளை, அடுப்பு, தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நான்கு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும், மேலும் ஐந்து வீடுகளைக் குறிவைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வாடகை வீட்டில் தங்கி கொள்ளைக்குத் திட்டமிட்டதாகப் புகார்
போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த யசோதா (20), ஜவளகிரியைச் சேர்ந்த வெண்ணிலா (22) ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். இவர்களுடன் யசோதாவின் தந்தை ஆனந்தன் (42), அவரது தம்பி சந்தோஷ்குமார் (40) ஆகியோரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
நான்கு பேரும் காரிமங்கலம் அருகே சொட்டாண்டஅள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்ததாகவும், பழைய சொகுசு காரை வாங்கிக் கொள்ளைக்குப் பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பகல் நேரங்களில் இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்து, ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு, அவற்றைச் செல்போனில் படம் பிடித்துள்ளனர். பின்னர், இரவு நேரங்களில் காரில் சென்று அந்த வீடுகளில் கொள்ளையடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகைகள், பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து ஒன்றரை பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம், பித்தளைப் பாத்திரங்கள், குத்துவிளக்குகள், சமையல் எரிவாயு உருளை, தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
தொடர் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நான்கு பேரைக் கைது செய்த காவல் ஆய்வாளர் தவமணி தலைமையிலான தனிப்படையினரின் நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்