முன்னாள் பேரூராட்சி தலைவர் பி.சி.ராமன் நினைவாக ரூ.7.50 லட்சத்தில் இறுதி ஊர்வல வாகனம்!

காரிமங்கலம் நவீன எரிவாயு தகன மேடைக்கு குளிர்சாதனப் பெட்டியும் வழங்கல் – பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அரிமா சங்கம் மூலம் ஒப்படைப்பு

காரிமங்கலம் – அக்டோபர் 7: தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடைக்கு, முன்னாள் பேரூராட்சி தலைவர் பி.சி.ராமன் நினைவாக ரூ.7.50 லட்சம் மதிப்பிலான இறுதி ஊர்வல வாகனம் மற்றும் குளிர்சாதனப் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரிமங்கலம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையை பண்ணந்தூர் அரிமா சங்கம் பொறுப்பேற்று செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், முன்னாள் பேரூராட்சி தலைவர் பி.சி.ராமன் நினைவாக, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இறுதி ஊர்வல வாகனம் மற்றும் குளிர்சாதனப் பெட்டி இலவசமாக வழங்கப்பட்டது.

காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பொன்னுசாமி, முன்னாள் ஆளுநர் ரவிவர்மா, மூத்த உறுப்பினர் லோக்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இறுதி ஊர்வல வாகனம் மற்றும் குளிர்சாதனப் பெட்டியை பண்ணந்தூர் அரிமா சங்கத் தலைவர் கலீயுல்லாவிடம், பேரூராட்சி தலைவர் பி.சி.மனோகரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பி.சி.மனோகரன், ஏழை மற்றும் எளிய பொதுமக்கள் தங்களது உறவினர்களின் இறுதிச்சடங்குகளை குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் மேற்கொள்ள இந்த இறுதி ஊர்வல வாகனமும் குளிர்சாதனப் பெட்டியும் பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.

காரிமங்கலம் பகுதியில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஏற்பாடு, இறுதிச்சடங்கு நேரங்களில் பொருளாதார ரீதியாக சிரமப்படும் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. நவீன எரிவாயு தகன மேடைகள் பொதுமக்கள் பயன்பாட்டில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான இறுதிச்சடங்கு வசதிகளை வழங்கும் நோக்கில் செயல்படுகின்றன.

நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply