கேரளம் : “சாவர்க்கர்தான் அதிகம் தண்டிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரா?” – வினாடி வினா சர்ச்சையில் 2 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!

காசர்கோடு:

கேரள மாநிலம் காசர்கோட்டில் சாவர்க்கரை புகழும் வகையில் கேள்விகள் இடம்பெற்றதாக எழுந்த சர்ச்சைக்குரிய வினாடி வினா போட்டி தொடர்பாக கல்வித்துறை அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக மேலும் இரண்டு ஆசிரியர்களுக்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்ச்சைக்குரிய கேள்வித்தாளைத் தயாரிக்க உதவிய கும்பளா துணை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டு, இன்னும் ஒரு வாரத்திற்குள் பொதுக் கல்வி இயக்குநரிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் உதவி கல்வி அலுவலர்களுக்கும் (AEO) தவறு இருந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் இடைநீக்கம் – உயர்நீதிமன்றம் தடை

சர்ச்சைக்குரிய கேள்விகளைத் தயாரிக்கும் பணிக்கு தலைமை வகித்ததாகக் கூறப்படும் ஆசிரியர் குருபிரசாத் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால், ஆசிரியருக்கு எதிரான இடைநீக்க நடவடிக்கைக்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடரலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.

சர்ச்சையை ஏற்படுத்திய கேள்வி என்ன?

காசர்கோடு மாவட்டத்தின் கும்பளா மற்றும் மஞ்சேஸ்வரம் துணை மாவட்டங்களில் நடைபெற்ற LP பிரிவு சமூக அறிவியல் கிளப் ‘Freedom Quiz 2026’ போட்டிக்காக தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளில் இடம்பெற்ற ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அதிகமான தண்டனையைப் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் யார்?” என்ற கேள்விக்கு, விடைக்குறிப்பில் வி.டி. சாவர்க்கர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கேள்வி மற்றும் பதில் தொடர்பாக எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து கல்வித்துறை விசாரணையை தொடங்கியது.

தற்போது மேலும் இரண்டு ஆசிரியர்களிடம் வாக்குமூலம் பெற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், விசாரணை அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் பொதுக் கல்வி இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply