அமைச்சர் கார் மோதி இளைஞர் பலி..! காட்டாங்குளத்தூரில் அதிர்ச்சி விபத்து

சென்னை அருகே காட்டாங்குளத்தூர் பகுதியில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் 26 வயது இளைஞர் இறையன்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெகதீஸ்வரி சென்னைக்கு வந்துகொண்டிருந்தார். அவர் அரசு வாகனத்தில் முன்னதாகச் சென்ற நிலையில், பாதுகாப்பு எஸ்கார்ட் வாகனமும், அதனைத் தொடர்ந்து அவரது சொந்த வாகனமான மாருதி எர்டிகா காரும் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காட்டாங்குளத்தூர் சந்திப்பு அருகே வந்தபோது, அமைச்சரின் சொந்த கார் ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் சென்ற இறையன்பு மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இறையன்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார், உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தில் தொடர்புடைய அமைச்சரின் சொந்த மாருதி எர்டிகா கார் பறிமுதல் செய்யப்பட்டு, விபத்துக்கான காரணம், வாகனத்தின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த ஓட்டுநரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க அமைச்சர் சென்னைக்கு வந்துகொண்டிருந்தபோது, அவரது வாகன அணிவகுப்பில் இடம்பெற்ற கார் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் காட்டாங்குளத்தூர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply