ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு..! 6¼ பவுன் நகை, ரூ.30 ஆயிரம் கொள்ளை!

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மலையாண்டஅள்ளி பகுதியில், ராணுவ வீரரின் வீட்டின் கதவு மற்றும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாண்டஅள்ளி அருகே உள்ள பந்தேறி நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் திருச்சியில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (48), கடந்த 30ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது இரண்டாவது மகளைப் பார்ப்பதற்காக சென்றிருந்தார்.

இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி இரவு ஜெயஸ்ரீ வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6¼ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராணுவ வீரரின் வீட்டில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply