மது போதையில் கார் ஓட்டி விபத்து: கேரள கலால் துறை அதிகாரி பணியிடைநீக்கம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் கலால் துறை அதிகாரி ஆர். ஷிஜு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெய்யாற்றின்கரை அணை சோதனைச் சாவடியில் தடுப்பு நடவடிக்கை அலுவலராகப் பணியாற்றி வந்த அவர்மீது, கலால் துறை ஆணையர் சாம்பசிவ ராவ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 24ஆம் தேதி, கேரள மாநிலம் காட்டாக்கடை அருகே கட்டைக்கோடு பகுதியில் இருந்து காட்டாக்கடை நோக்கி அதிவேகமாகச் சென்ற ஷிஜுவின் கார், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது எதிர்திசையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி, அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் உயிர் தப்பினார்.
விபத்துக்குப் பிறகு காரிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஷிஜுவை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்டாக்கடை காவல்துறையினர் அவரைக் காவலில் எடுத்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருவனந்தபுரம் துணை கலால் துறை ஆணையரிடம் கலால் துறை ஆணையர் அறிக்கை கோரினார். அந்த அறிக்கையின் அடிப்படையில், ஆர். ஷிஜுவைப் பணியிடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்