கேரளாவில் அமைச்சர்கள், தனிப்பணியாளர்களுக்கு 480 ஐபேட்கள் வாங்கத் திட்டம்! ₹6.71 கோடி செலவாகும் என மதிப்பீடு.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், அமைச்சர்கள் மற்றும் அவர்களது தனிப்பணியாளர்களுக்காக ஐபேட்கள் வாங்கும் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக மொத்தம் 480 ஆப்பிள் ஐபேட்களை வாங்குவதற்குக் கெல்ட்ரான் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இதற்கான மொத்தச் செலவு ₹6.71 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்முதல் திட்டத்தில் மூன்று வகையான சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. 13 அங்குல ஐபேட் புரோ, 11 அங்குல ஐபேட் புரோ மற்றும் 11 அங்குல ஐபேட் ஆகிய மாடல்களில் தலா 160 சாதனங்கள் என மொத்தம் 480 ஐபேட்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்தக் கொள்முதலுக்காகப் பெரும் தொகை ஒதுக்கப்படுவது குறித்து விவாதம் எழுந்துள்ளது. இருப்பினும், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், இறுதி கொள்முதல் மற்றும் செலவின விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்