கேரளாவில் நாட்டிலேயே முதன்முறையாக வயதானோருக்கான ‘நட்பு அலுவலகம்’ சான்றிதழ்! கேரளாவின் புதிய திட்டம்!
நாட்டிலேயே முதன்முறையாக வயதானோருக்கு உகந்த அரசு அலுவலகங்களை அடையாளப்படுத்தும் சான்றிதழ் திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்த உள்ளது. வயதானோர் எளிதாகவும் பாதுகாப்பாகவும் அரசு சேவைகளைப் பெறும் வகையில், அரசு அலுவலகங்கள் மற்றும் அரை அரசு நிறுவனங்களுக்கு தரவரிசை அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், வயதானோருக்கு உகந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு தங்கம் (Gold), வெள்ளி (Silver), வெண்கலம் (Bronze) என மூன்று வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
எந்த நிறுவனங்களில் செயல்படுத்தப்படும்?
முதற்கட்டமாக, பொதுமக்கள் அதிகளவில் சேவைகளைப் பெறும் கிராம அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் போக்குவரத்து சேவை கவுன்டர்கள் உள்ளிட்ட இடங்களில் இந்தச் சான்றிதழ் திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
வயதானவர்கள் அலுவலகங்களுக்கு வரும்போது அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பான சூழல் மற்றும் சேவைகளை எளிதாகப் பெறுவதற்கான ஏற்பாடுகள் இருப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
வயதானோர் நலனுக்காக தனித்துறை
வயதானோரின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கேரள அரசு புதிதாக வயதானோர் நலத்துறையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் வயதானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களில் கேரளா முக்கிய இடத்தில் உள்ளது. மேலும், அடுத்த இரண்டு தசாப்தங்களில் மாநிலத்தில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, வயதானோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு தேவையான அரசு சேவைகள் எளிதாக கிடைப்பதை உறுதி செய்யவும் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட உள்ள வயதானோருக்கு உகந்த அலுவலக சான்றிதழ் திட்டம், அரசு சேவைகளைப் பெறும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக்குரல்