ஒரு வயது குழந்தையின் உடலில் ஊசி..! கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலம் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு வயது பெண் குழந்தையின் உடலில் சுமார் ஓராண்டாக ஊசி சிக்கியிருந்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். குழந்தையின் உடலில் இருந்த ஊசி, பின்னர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நாட்களில் மஞ்சள் காமாலை உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதால், குழந்தை பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவான NICU-வில் அனுமதிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
NICU சிகிச்சைக்குப் பிறகு குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, வலது பக்க விலா எலும்பு அருகே சிறிய வீக்கம் இருப்பதை பெற்றோர் கவனித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்களிடம் தெரிவித்தபோதும், அது பெரிய பிரச்சினை இல்லை என்றும், சிகிச்சை மூலம் சரியாகிவிடும் என்றும் கூறப்பட்டதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து குழந்தை அடிக்கடி அழுததுடன், வலி மற்றும் உடலில் வீக்கம் போன்ற பிரச்சினைகளையும் சந்தித்ததாக பெற்றோர் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் வழக்கமான அசௌகரியமாக இருக்கலாம் என ஆரம்பத்தில் நினைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் குழந்தையின் வலது விலா பகுதி அருகே வீக்கம் மற்றும் வலி அதிகரித்ததால், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனையில், விலா எலும்பு அருகே உடலுக்குள் உலோக ஊசி ஒன்று சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப்பட்டது.
கடந்த ஓராண்டில் குழந்தைக்கு வேறு அறுவை சிகிச்சையோ, நீண்டகால மருத்துவமனை சிகிச்சையோ நடைபெறவில்லை என்பதால், கோட்டயம் மருத்துவக் கல்லூரியின் NICU சிகிச்சையின்போதே ஊசி உடலுக்குள் சென்றிருக்கலாம் என பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், கேரள சுகாதாரத்துறை அமைச்சரிடமும் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
புகாரைத் தொடர்ந்து, கோட்டயம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு குழந்தை NICU-வில் இருந்தபோது பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், அப்போது வழங்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட விவரங்கள் குறித்து துணை கண்காணிப்பாளர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவ அலட்சியம் நடந்ததா என்பது விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.
தமிழக வெற்றிக்குரல்