மிஷன் சமுத்திரா திட்டத்திற்கு ஆதித்யா கார்ப்பரேஷன் ஆதரவு: 20 துறைமுகங்களை இணைக்க புதிய திட்டம்.
கேரள அரசு முன்னெடுத்து வரும் மிஷன் சமுத்திரா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆதித்யா கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய கடல்சார் வளர்ச்சித் திட்டத்தை முன்வைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாத் பணிக்கர் தெரிவித்துள்ளார்.
கடலோர வளர்ச்சி மற்றும் கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் “Coastal Economic Blue Revolution” என்ற திட்டத்தை செயல்படுத்த அரசின் அனுமதியை ஆதித்யா கார்ப்பரேஷன் கோரியுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை முதலமைச்சர் வி.டி. சதீசனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அனுமதி கிடைத்தவுடன் கட்டுமானப் பணிகளைத் தொடங்க முடியும் என்றும் பிரசாத் பணிக்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கேரள அரசு ஏற்கனவே மிஷன் சமுத்திரா மூலம் மாநிலத்தின் கடற்கரை, துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை ஒருங்கிணைத்து கடல்சார் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 600 கி.மீ. நீளமான கடற்கரை, சர்வதேச துறைமுகங்கள், கண்டெய்னர் முனையம் மற்றும் சிறிய துறைமுகங்களை ஒருங்கிணைப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
20 துறைமுகங்களை நவீனப்படுத்தும் திட்டம்
ஆதித்யா கார்ப்பரேஷன் முன்வைத்துள்ள திட்டத்தில் கேரளத்தின் 20 முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் துறைமுகங்களை நவீன முறையில் இணைத்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துறைமுகங்களை சுமார் 5,000 டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட துறைமுகங்களாக மேம்படுத்தும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
சாலை வழி அபாயகரமான சரக்கு போக்குவரத்தை குறைக்க திட்டம்
பெட்ரோலியம், டீசல், எரிவாயு, ரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட அபாயகரமான சரக்குகளை சாலை வழியாக நீண்ட தூரம் கொண்டு செல்வதை குறைத்து, கடல் வழியாக பாதுகாப்பாக கொண்டு செல்லும் கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மிஷன் சமுத்திராவின் ஒரு பகுதியாக சாலை போக்குவரத்து நெரிசலை குறைத்து சரக்கு போக்குவரத்தை நீர்வழிகள் மற்றும் கடலோரப் பாதைகளுக்கு மாற்றும் நோக்கமும் கேரள அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது.
5 முக்கிய இடங்களில் ஆயில் பங்கரிங் வசதி
திட்டத்தின் கீழ் ஐந்து முக்கிய மையங்களில் ஆயில் பங்கரிங் யூனிட்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கும் வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.
சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம்
காயல் சுற்றுலா, கடலோர ஒழுங்குமுறை மண்டலமான CRZ பகுதிகளில் டென்ட் தங்குமிடங்கள், புதிய கடற்கரை சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கேரள அரசின் மிஷன் சமுத்திரா திட்டத்திலும் கடல்சார் சுற்றுலா, லாஜிஸ்டிக்ஸ், கடல் வழி சரக்கு போக்குவரத்து மற்றும் துறைமுக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்புக்கு உதவும் திட்டம்
இந்தத் திட்டம் கடலோரப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய கடலோரக் காவல்படையின் செயல்பாடுகளுக்கும் தேவையான கடல்சார் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் திட்டம் உதவியாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
திட்டத்துடன் தொடர்புடைய துறைமுகப் பணிகளுக்கான முழுப் பொறுப்பையும் ஆதித்யா கார்ப்பரேஷன் இயக்குநர் ஜசிந்தா பிரசாத் பணிக்கர் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் இறுதி அனுமதி கிடைத்த பிறகு திட்டத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மிஷன் சமுத்திரா திட்டத்தின் கீழ் கேரளத்தை ஒருங்கிணைந்த துறைமுக மற்றும் கடல்சார் பொருளாதார மையமாக மாற்றும் அரசின் விரிவான திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக வெற்றிக்குரல்