கேரள போலீஸ் விளையாட்டுப் போட்டி: 76 ஆண்டு ஜாவலின் சாதனை முறியடிப்பு!
கேரள போலீஸ் 47-வது மாநில தடகள மற்றும் விளையாட்டுப் போட்டியின் 2ஆம் நாள் போட்டிகள் பல்வேறு வரலாற்று சாதனைகளுக்கு களம் அமைந்தன. திருவனந்தபுரத்தில் உள்ள யூனிவர்சிட்டி ஸ்டேடியம் மற்றும் சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 26 விளையாட்டு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்தினர்.
99 புள்ளிகளுடன் முன்னிலை பெற்ற IRBN
இரண்டாம் நாள் மதியம் வரை நடைபெற்ற போட்டிகளில் கேரள ஆம்டு வுமன் போலீஸ் பட்டாலியனை பின்னுக்குத் தள்ளி இந்தியா ரிசர்வ் பட்டாலியன் (IRBN) 99 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
சாம்பியன்ஷிப்பை கைப்பற்றும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இறுதி நாளில் நடைபெற உள்ள போட்டிகள் அணிகளின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
76 ஆண்டு பழமையான ஜாவலின் சாதனை முறியடிப்பு
இரண்டாம் நாள் போட்டியின் முக்கிய நிகழ்வாக 76 ஆண்டுகளாக நீடித்து வந்த ஜாவலின் த்ரோ சாதனை முறியடிக்கப்பட்டது.
கே.ஏ.பி. முதல் பட்டாலியனைச் சேர்ந்த அருண் பேபி, 73.29 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.
1950ஆம் ஆண்டு எஸ்.ஏ.பி. வீரர் பி.வி. தாமஸ் 60.96 மீட்டர் தூரம் எறிந்து படைத்த சாதனையையே அருண் பேபி முறியடித்துள்ளார்.
ஆன் ரோஸ் டோமிக்கு இரட்டை தங்கம்
ஸ்பெஷல் ஆர்ம்டு போலீஸைச் சேர்ந்த ஆன் ரோஸ் டோமி, 100 மீட்டர் ஹர்டில்ஸ் மற்றும் பெண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று இரட்டை சாதனை படைத்தார்.
ரேஸ் வாக்கில் பிரதேசுக்கு முதலிடம்
இரண்டாம் நாள் போட்டிகள் காலை 6 மணிக்கு சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் தொடங்கிய 10 கிலோமீட்டர் ரேஸ் வாக் போட்டியுடன் ஆரம்பமானது.
இதில் கண்ணூர் சிட்டியைச் சேர்ந்த பிரதீஷ். ஓ முதலிடம் பிடித்தார்.
5 கிலோமீட்டர் ரேஸ் பிரிவில் கே.ஏ.பி. 4-வது பட்டாலியனைச் சேர்ந்த அக்ஷயா கே. முதலிடம் பெற்றார். ஆண்கள் போல் வால்ட் போட்டியில் கே.ஏ.பி. 3-வது பட்டாலியனைச் சேர்ந்த அஷ்வின் முதலிடம் பிடித்தார்.
ரிலே போட்டிகளில் அணிகளுக்கு வெற்றி
பெண்கள் பொதுப் பிரிவு 4×100 மீட்டர் ரிலேவில் அருணிமா, அஸ்வதி என்.கே., பார்வதி பி.ஜே., சோனா எஸ். குமார், அகிலா கே. அசோகன் ஆகியோர் அடங்கிய பெண்கள் பட்டாலியன் அணி முதலிடம் பெற்றது.
சீனியர் பெண்கள் 4×100 மீட்டர் ரிலேவில் பாலக்காடு அணியைச் சேர்ந்த ஆக்னஸ், சுனிதா, ஹேமலதா, சுனிதா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
சூப்பர் சீனியர் பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் சிட்டியைச் சேர்ந்த அம்பிளி கலா, லட்சுமி பி., லதா, சிந்து எல்., மஞ்சு எஸ். ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
ஜாவலின், லாங் ஜம்ப் போட்டிகளில் வெற்றி
பெண்கள் ஜாவலின் த்ரோவில் மலபார் ஸ்பெஷல் போலீஸைச் சேர்ந்த அலீனா ஜோஸ் முதலிடம் பிடித்தார்.
சூப்பர் சீனியர் லாங் ஜம்ப் பிரிவில் வயநாட்டைச் சேர்ந்த ஜெய்சன் ஓ.வி. தங்கம் வென்றார்.
சீனியர் லாங் ஜம்ப் பிரிவில் கோழிக்கோட்டைச் சேர்ந்த புஜு கே.சி. தங்கம் வென்றார். பெண்கள் பிரிவில் எர்ணாகுளம் ரூரலைச் சேர்ந்த ஐசிமோல் முதலிடம் பிடித்தார்.
டிஸ்கஸ் த்ரோவில் கண்ணூர், கோட்டைக்கு தங்கம்
யூனிவர்சிட்டி கிரவுண்டில் நடைபெற்ற ஆண்கள் டிஸ்கஸ் த்ரோவில் கண்ணூர் சிட்டி போலீஸ் வீரர் ஃபைசல் கே., 35.08 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார்.
பெண்கள் டிஸ்கஸ் த்ரோவில் கோட்டயத்தைச் சேர்ந்த ஆர்யா பி. தங்கம் வென்றார்.
ஆண்கள் ஹாமர் த்ரோவில் கோட்டயத்தைச் சேர்ந்த அனூப் டி.பி. முதலிடமும், அஜேஷ் மேத்யூ இரண்டாமிடமும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் கண்ணூர் சிட்டியைச் சேர்ந்த செரீனா மற்றும் ஸ்ரிக்ஷா சந்திரன் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர்.
110 மீட்டர் ஹர்டில்ஸில் புதிய சாதனை
கே.ஏ.பி. 2-வது பட்டாலியனைச் சேர்ந்த சஹத், ஆண்கள் பொதுப் பிரிவு 110 மீட்டர் ஹர்டில்ஸில் 14.634 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய சாதனை படைத்தார்.
2012ஆம் ஆண்டு நிபு ஜார்ஜ் 15.20 வினாடிகளில் பதிவு செய்திருந்த சாதனையை சஹத் முறியடித்துள்ளார்.
டெகத்லானில் IRBN வீரர் முதலிடம்
இரண்டு நாட்களாக நடைபெற்ற டெகத்லான் போட்டியில் IRBN வீரர் முகமது தின்ஷாத், 4,424 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார்.
ஆண்கள் 400 மீட்டர் போட்டியில் கே.ஏ.பி. 3-வது பட்டாலியனைச் சேர்ந்த அனிருத்த் சி.ஆர். தங்கம் வென்றார்.
1500 மீட்டர் போட்டியில் பெண்கள் பட்டாலியனைச் சேர்ந்த மீரா பி. மற்றும் IRBN வீரர் கே.பி. விஷ்ணு பணிக்கர் தங்கள் பிரிவுகளில் தங்கம் வென்றனர்.
3000 மீட்டர் ஆண்கள் ஸ்டீப்பிள்சேஸ் போட்டியில் IRBN வீரர் ஷினோய் எஸ்.ஜி. தங்கம் வென்றார்.
ஆண்கள் 4×100 மீட்டர் ரிலேவில் கே.ஏ.பி. 2-வது பட்டாலியனைச் சேர்ந்த ஆஷிஃப், பிரமோத், சஹத், முகமது ஃபாய்ஸ் சி., ராகுல் எம். ஆகியோர் அடங்கிய அணி தங்கம் வென்றது.
இறுதி நாளில் விறுவிறுப்பு
இரண்டாம் நாள் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் சாதனைகளை பதிவு செய்துள்ளனர். சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவதற்கான போட்டி தொடர்ந்து விறுவிறுப்பாக உள்ளதால், இறுதி நாள் போட்டிகள் அணிகளுக்கு மிகவும் முக்கியமானதாக அமைய உள்ளது.
தமிழக வெற்றிக்குரல்