தனியார் மருத்துவமனைகளின் அதிக சிகிச்சைக் கட்டணத்தை கட்டுப்படுத்த புதிய சட்டம்: கேரள அரசு நடவடிக்கை.
தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் சிகிச்சைச் செலவு மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய சட்டம் கொண்டுவர கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மருந்துகளின் விலை, மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணம், மருத்துவமனை அறை வாடகை உள்ளிட்டவற்றில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளீதரன் தெரிவித்துள்ளார்.
சட்ட மசோதாவுக்கான வரைவு தயாரிக்க குழு
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாவின் வரைவை தயாரிப்பதற்காக, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் சுகாதாரத்துறை இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் கேரள மருத்துவ சேவைகள் கழகம் (KMSCL) நிர்வாக இயக்குநர் ஆகியோரும் இடம்பெற உள்ளனர்.
சிகிச்சைச் செலவை குறைக்க பரிந்துரைகள்
தனியார் மருத்துவமனைத் துறையினருடன் ஆலோசனை நடத்தி, சிகிச்சைக்கான செலவுகளை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவச் செலவுகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துதல், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் குழு பரிந்துரைகளை வழங்கும்.
இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட மசோதாவின் வரைவு தயாரிக்கப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்