இலவசப் பேருந்துப் பயணத்தில் மிச்சமான பணத்தில் மாணவர்களுக்கு உணவு! மூன்று ஆசிரியைகளுக்கு அமைச்சரின் பாராட்டு.

கேரள மாநிலம், பொன்முடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்காக, இலவசப் பேருந்துப் பயணத்தில் சேமித்த பணத்தைச் செலவிட்டு வரும் மூன்று ஆசிரியைகளுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு ஆசிரியைகளையும் பள்ளி மாணவர்களையும் அழைத்து, அவர்களைக் கௌரவித்ததுடன், அனைவருக்கும் மதிய உணவும் வழங்கினார்.

சேமிப்புப் பணத்தில் மாணவர்களுக்கு உணவு

மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியைச் சேர்ந்த பி. நிமிஷா, பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தேவன், வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ஷாலு பவுலோஸ் ஆகிய மூன்று ஆசிரியைகளே இந்த மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொன்முடியில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விதுராவில் வாடகைக்கு வசிக்கும் இவர்கள், தினமும் நீண்ட தூரம் பயணிக்கின்றனர். இதற்காகப் பிரியதர்ஷினி இலவசப் பயணத் திட்டத்தைப் பயன்படுத்தி வரும் ஆசிரியைகள், அந்தப் பயணத்தின் மூலம் சேமிக்க முடிந்த தொகையை மாணவர்களின் உணவுச் செலவுக்காக ஒதுக்கியுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் உணவு வழங்கி வருகின்றனர்.

நின்றுபோக இருந்த உணவுத் திட்டத்தைத் தொடர்ந்த ஆசிரியைகள்

தோட்டத் தொழிலாளர்களின் பெற்றோர் மாலையில் வேலை முடித்துத் திரும்புவதற்குத் தாமதமாகும் சூழலைக் கருத்தில் கொண்டு, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் மாலை நேர உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் நன்கொடையாளர்களின் உதவியுடன் செயல்பட்டு வந்த இந்தத் திட்டம், நிதி நெருக்கடியால் நிறுத்தப்படும் நிலைக்குச் சென்றது. அப்போது, மாணவர்களின் உணவுத் தேவையை உணர்ந்த இந்த மூன்று ஆசிரியைகளும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இலவசப் பயணத் திட்டத்தின் மூலம் சேமித்த பணத்தை உணவுக்காகச் செலவிட்ட அவர்கள், பின்னர் தங்களது சொந்தப் பணத்தையும் ஒதுக்கி மாணவர்களுக்கு உணவு வழங்குவதைத் தொடர்ந்து வருகின்றனர்.

பள்ளி வழித்தடத்தில் கூடுதல் பேருந்து கோரிக்கை

ஆசிரியைகளின் சேவை சமூக வலைதளங்களில் கவனம் பெற்றதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜான் அவர்களை அழைத்துப் பாராட்டியுள்ளார்.

ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த அமைச்சர், சமூகப் பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட அவர்களின் செயல் புதிய தலைமுறைக்கு சிறந்த முன்னுதாரணம் எனத் தெரிவித்தார். விளம்பர நோக்கமின்றி அமைதியாகச் சேவையாற்றி வரும் இந்த ஆசிரியைகள், தங்களது உழைப்பாலும் அன்பாலும் சமூகத்திற்குப் புதிய பாடத்தை அளிப்பதாகவும் பாராட்டினார்.

மேலும், பள்ளி நேரங்களில் அந்த வழித்தடத்தில் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) கூடுதல் பேருந்து ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசிரியைகளின் கோரிக்கையையும் அமைச்சர் பரிசீலித்தார்.

தங்களுக்குக் கிடைத்த பயணச் சலுகையின் மூலம் சேமித்த பணத்தை, உணவு தேவைப்படும் குழந்தைகளின் நலனுக்காகப் பயன்படுத்திய இந்த மூன்று ஆசிரியைகளின் செயல், சமூக அக்கறைக்கும் மனிதநேயத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.


இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.

Leave a Reply