தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமாருக்கு எதிரான 2006 வழக்கு: கேரளாவில் மீண்டும் விசாரணை.
கேரள மாநிலத்தில், தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமாருக்கு எதிராக 2006-ஆம் ஆண்டு நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விஜிலென்ஸ் விசாரணையை மீண்டும் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கியானேஷ் குமார் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கேரள மாநில போக்குவரத்துத் திட்டம் (KSTP) தொடர்பான பணிகள் குறித்து இந்த விசாரணை நடைபெற உள்ளது.
KSTP திட்டம் தொடர்பான குற்றச்சாட்டு
2006-ஆம் ஆண்டு உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட KSTP திட்டத்தின் கீழ், அங்கமாலி முதல் திருவனந்தபுரம் வரையிலான எம்.சி. சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் ரூ.215 கோடி மதிப்பிலான இந்தத் திட்டப் பணிகளை PATI-BEL என்ற இந்தியா–மலேசிய கூட்டு நிறுவனம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைமை திட்டப் பொறியாளராக இருந்த மலேசியாவைச் சேர்ந்த லீ சீ பீன் என்பவர் 2006-ஆம் ஆண்டு குவாலாலம்பூரில் உயிரிழந்தார். அவரது மரணம் மற்றும் திட்டப் பணிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அப்போது விஜிலென்ஸ் விசாரணை நடைபெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புகாரின் அடிப்படையில் மீண்டும் விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக கியானேஷ் குமாருக்கு எதிராக கே.பி.சி.சி. நிர்வாகக்குழு உறுப்பினர் மலையின்கீழ் வேணுகோபால் அளித்த புகாரைத் தொடர்ந்து, அதில் முதற்கட்டமாக விசாரிக்கத் தகுந்த அம்சங்கள் இருப்பதாகக் கருதிய கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா, விஜிலென்ஸ் இயக்குநர் மனோஜ் ஆபிரகாமிடம் விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற விஜிலென்ஸ் ஆரம்பகட்ட விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை என்றும், தற்போது பழைய ஆவணங்கள் மற்றும் புகாரில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெறும்
லீ சீ பீனின் மரணம் தொடர்பான புகாரில் கியானேஷ் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், திட்டத்திற்கான பணம் தொடர்பாக முறைகேடு நடந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் புகாரில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகும்; அவற்றின் உண்மைத் தன்மை விஜிலென்ஸ் விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.
கியானேஷ் குமாருக்கு எதிராக தற்போது நடைபெறும் அரசியல் போராட்டங்களின் பின்னணியிலும், கேரளாவில் 2006-ஆம் ஆண்டு விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்