ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு..! கே.என். நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு
சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட 13 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக கே.என். நேரு இருந்தபோது வெளியிடப்பட்ட டெண்டர்கள் மற்றும் பணிகள் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும் மாநில அதிகாரிகளுக்கு தகவல் மற்றும் ஆவணங்களை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கே.என். நேரு, அவரது சகோதரர்கள் கே.என். மணிவண்ணன், ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத் உள்ளிட்ட 13 பேர் மீது DVAC வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக TV9 Tamil தெரிவித்துள்ளது.
டெண்டர் பணிகளில் கட்சி நிதி என்ற பெயரில் சுமார் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், 14 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, கே.என். நேரு மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் DVAC அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இந்த சோதனைகளில், முறைகேடுகள் தொடர்பான 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக DVAC தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை கே.என். நேரு மறுத்துள்ளதுடன், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், சட்டரீதியாக வழக்கை எதிர்கொண்டு தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்