கொளத்தூர் வி.எஸ்.பாபு வெற்றி வழக்கு: ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு?
ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களைச் சரிபார்க்க தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே, அதாவது மே 7ஆம் தேதி, விண்ணப்பித்ததாக வாதிட்டார்.
ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான 45 நாள் காலக்கெடு முடிந்த பின்னரே இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும், எனவே இந்த வழக்கைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்றும் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் எதிர்ப்பு
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என்றும், ஒரு எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்க தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால் இதேபோன்ற கோரிக்கைகளுடன் பலரும் வழக்கு தொடரும் வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த மற்றொரு வழக்கிலும் விசாரணை நடைபெற்றது. 2025ஆம் ஆண்டு அந்த விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து, அந்த வழக்கைத் திரும்பப் பெற்று புதிய மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பு அனுமதி கோரியது. இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தமிழக வெற்றிக்குரல்