கும்மங்கோட்டில் தொடரும் மர்ம விலங்கு தாக்குதல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை – பள்ளிகளுக்கு விடுமுறை.

கோழிக்கோடு மாவட்டம் நாதாபுரம் அருகே கும்மங்கோடு பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு தாக்குதல் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு வனத்துறை மற்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத விலங்கு தாக்கியதில் இதுவரை 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் அவர்களுக்கு தலை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் ஈடுபட்டது எந்த வகையான விலங்கு என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனினும், அது சிறுத்தையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கும்மங்கோடு பகுதியில் வனப்பகுதி எதுவும் அருகில் இல்லாத நிலையில், அடையாளம் தெரியாத விலங்கு எங்கிருந்து வந்தது என்பது குறித்து அதிகாரிகளிடையே விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள மதரஸாக்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலங்கின் நடமாட்டத்தை கண்டறிந்து, அது எந்த விலங்கு என்பதை உறுதி செய்வதற்காக வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply