ஐஸ்கிரீம் கவர் போடச் சென்ற நேரத்தில் விபரீதம்: தவறுதலாக வேறு ரயிலில் ஏறிய 4 வயது சிறுவன் மீட்பு.
கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தில், ரயிலுக்காக காத்திருந்தபோது தவறுதலாக வேறு ரயிலில் ஏறிய 4 வயது சிறுவனை டிக்கெட் பரிசோதகர் (TTE) பத்திரமாக மீட்டு, பெற்றோருடன் மீண்டும் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 1.40 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.
பெற்றோர் கவனத்தை விட்டு சென்ற நேரத்தில் ரயிலில் ஏறிய சிறுவன்
பானூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் 4 வயது மகனுடன் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் கோழிக்கோட்டில் இருந்து தலைச்சேரி செல்லும் ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்தனர்.
அப்போது சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமின் கவரை குப்பையில் போடுவதற்காக பெற்றோரில் ஒருவர் சிறிது நேரம் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறுவன் எதிர்பாராதவிதமாக ஏறியுள்ளார். சிறிது நேரத்தில் ரயிலும் நடைமேடையை விட்டு புறப்பட்டுச் சென்றது.
சிறுவனை காணாமல் பெற்றோர் அதிர்ச்சி
சிறுவனை காணவில்லை என்பதை அறிந்த அவரது தந்தை சிராஜுதீனும், தாய் ஷமீனாவும் நடைமேடையில் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்காததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையில் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் D-8 பெட்டியின் கதவு அருகே சிறுவன் தனியாக நின்றுகொண்டிருந்ததை TTE என்.எம். பிரதீஷ் கவனித்துள்ளார்.
TTE-யின் உடனடி நடவடிக்கை
சிறுவனை பார்த்தவுடன் பிரதீஷ் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து சிறுவன் காணாமல் போன தகவலும் கட்டுப்பாட்டு அறை வழியாக பிரதீஷுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இரு தகவல்களையும் ஒருங்கிணைத்து, சிறுவன் தனது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
சிறுவனை சரியான நேரத்தில் கவனித்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த TTE-யின் துரித நடவடிக்கையால், சிறுவன் பாதுகாப்பாக பெற்றோருடன் மீண்டும் இணைந்தார்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்