17 அம்ச கோரிக்கைகள்..! கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி:
தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாலை நேர கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் நோஹிரா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முனியம்மாள், செயலாளர் பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அனிதா நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு லெவல்-6, மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு லெவல்-5, உதவியாளர்களுக்கு லெவல்-4 ஊதிய நிலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஊதிய விகிதத்தை மாற்றியமைத்து, அதன் பின்னர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிப்பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தினர்.
மேலும், 2019ஆம் ஆண்டு முதல் உள்ளூர் பணி மாறுதல் வழங்கப்படவில்லை என்றும், இதனால் பல்வேறு இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக 10 முதல் 40 கி.மீ. தொலைவு வரை பஸ் வசதி இல்லாத பகுதிகளில் பணிபுரிவதால், குறிப்பிட்ட நேரத்தில் அங்கன்வாடி மையத்திற்கும், பின்னர் வீட்டிற்கும் செல்ல முடியாமல் கடந்த பல ஆண்டுகளாக சிரமப்படுவதாக கூறினர்.
எனவே, உடனடியாக உள்ளூர் பணி மாறுதல் வழங்கி ஊழியர்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்பி, ஊழியர்களுக்கு ஏற்படும் இரட்டை பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஊதிய நிலை, பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு, உள்ளூர் பணி மாறுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழக வெற்றிக்குரல்