போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு குட் நியூஸ்..! இனிப்பு வழங்கி முதல்வருக்கு நன்றி.

கிருஷ்ணகிரி:

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு, பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வுக்கு இணையான உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற அலுவலர் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கில், 2023 மார்ச் 2-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படும் அகவிலைப்படி விகிதமே ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அகவிலைப்படி தொகையை தவணை முறையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 98 ஆயிரம் போக்குவரத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடைய உள்ளனர்.

இந்த அரசாணையை வரவேற்ற கிருஷ்ணகிரி மாவட்ட போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து, தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததுடன், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி வழக்கை வெற்றிகரமாக நடத்தி முடித்த கோவை பேரவைக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அகவிலைப்படி தொகை தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் முக்கிய கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக ஓய்வூதியர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply