மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கைது!
போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை – சேலம் மத்திய சிறையில் அடைப்பு
கிருஷ்ணகிரி – செப்டம்பர் 19: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் 65 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சின்னராஜை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கால்நடை பராமரிப்புத் துறையில் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சின்னராஜ், சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தனது கைபேசியில் ஆபாச வீடியோக்களைக் காண்பித்து தொந்தரவு அளித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஊத்தங்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் வருவதை அறிந்த சின்னராஜ் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அனைத்து மகளிர் காவல்துறையினர் சின்னராஜை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னராஜை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமிகள் அளித்த தகவல்கள் மற்றும் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்